flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

சனி, மார்ச் 31, 2012

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. "ஒரே ஒரு தேர்வு தான்:தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் வரை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: 

*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.


*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.


*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது, "ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை. இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. 


இந்நிலையில் கடந்த 25ம் தேதி, திருச்சியில் சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, "விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.


கால அவகாசம் நீட்டிப்பு:

கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய போதுமான கால அவகாசம் வழங்க டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.


நன்றி :tnkalvi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf